Friday, August 14, 2009

தயவு செய்து இத படிக்காதீங்க

ஆணாதிக்கம், ஆவன்னா தித்திக்கும், பெண்ணீயம், பெருங்காயம், காதல், கத்தரிக்காய், கவிதை, கவுஜ, கவிக்கோ, கலீல்கிப்ரான், ஆணி, ஆவனி, தாவணி, இயற்கை, தென்காசி, சம்பன்குளம், குற்றாலம், அருவி குளியல், கேரளா இப்படி என்னவெல்லாமோ எழுதலாம்னு வந்தேன் !

சட்டென எங்கிருந்தோ வந்த ஒரு அசட்டு சோம்பேறித்தனம் அதை நாளைக்கு தள்ளிபோட்டுவிட்டது.

அது எந்த நாளை என்பது நிச்சயமாக நீங்கள் யாவரும் அறியாதது, நானும்தான் ! (பின்னே இத எழுதனும்னு நெனச்சே நாலுநாளு ஆச்சு:)

யான் வர்ட்டே
பேரன்புடன் - பாசக்கார பய

Thursday, June 25, 2009

பத்தோட முப்பத்திரெண்டு

என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தொடர் பதிவிற்கு அழைத்த சேக்காளி கோகுலனுக்கு மிக்க நன்றி, நல்லா இரு மக்கா..

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

வூட்ல வச்ச பெயர் முஹமது மீறான் அன்வர், முஹமது பொதுப்பெயரா இருக்க மீறான்(மீறாப்பிள்ளை) தாத்தாபெயரா இருக்க வீட்ல எல்லாரும் அன்வர்னுதான் கூப்பிடுவாக, அப்புறம் பள்ளி கல்லூரில எல்லா பயபுள்ளைகளும் மீறான்னே கூப்பிட ரெண்டையும் சேர்த்து மீறான் அன்வர்னு மட்டும் நான் வச்சிக்கிட்டேன்.

ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சரியா பதினோரு மாசத்துக்கு முன்னாடி சாத்தனூர் அணைக்கட்டுக்கு அலுவக சுற்றுலா போயிருந்தோம், போகும் போது வாகனத்துல சந்தோஷ் சுப்ரமணியம் படம் போட்டானுவ, அதுல ஒரு காட்சியில நம்ம நாயகன் செயம் ரவி சொல்லுவாரு "உங்களுக்கு தெரியாமலே உங்க கைக்குள்ள இருந்து என் கைய எடுத்துடலாம்னு பார்த்தேன்பா ஆனா இப்பகூட என் கை உங்க கைக்குள்ளதான்ப்பா இருக்குன்னுட்டு" ங்கொய்யால சத்தியமா அப்ப வந்த அழுகைய அடக்கவே முடியல அழுது தொலைச்சிட்டேன் :(

சமீபத்துல மிக நெருங்கிய உறவினர் மரணத்திற்கு சென்றிருந்த போது எம்புட்டு முயன்றும் அழுகை வரமாட்டேன்னு அடம்பிடிச்சிடுத்து, முகத்த மட்டும் சோகமா வச்சிக்கிட்டு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சல்லவா ரொம்பவே பிடிக்கும், அதுலயும் என் பெயர நானே அடிக்கடி எழுதி அழகுபார்ப்பதுண்டு :)

4.பிடித்த மதிய உணவு என்ன?

இன்னதுன்னெல்லாம் கிடையாது என்ன சாப்பாடு இருக்கோ ச்கட்டுமேனிக்கு (அளவோடு) மேஞ்சுவேன் !


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நேர்லயா இணையத்துலயான்னு கேட்கலியே :(

நமக்கு பிடிச்சிருக்கா கற்பூரம்தான் கப்புனு புடிச்சிக்குவேன்,


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?


மொதல்ல ஆத்துல நீச்சல்டிச்சு அதுவும் முங்கு நீச்சல் ! அப்புறம் அருவில நாள் முளுசுக்கும் கிடப்பேன், கடலிலும் குளிச்சிருக்கேன் கடலும் அதன் அலையும் பிடிக்கும் :)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

மொதல்ல கண் பின் முகம், முக்கியமா புன்னகை

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எண்ணையே ரொம்ப பிடிக்கும் தனித்தனியா பிரிக்கவிரும்பல :)

பிடிக்காதது : சோம்பல்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஐயம் வெரி சாரி இப்ப வரைக்கும் ஒரு சாரி கட்டின தேவதையும் கிடைக்காததால் சரி பாதியும் தப்பு பாதியும் நாந்தேன் ஆக முந்தின கேள்விக்கான பதில இன்னோரு தபா படிச்சிக்கோங்க.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாராவது இருந்தாதான் வருத்தப்படனும் :) (அப்படியார் இருந்தாலும் பாவம் அவங்க ! )

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

முழுசா கருநீலத்திலான அறைக்கை சட்டை அடர் பச்சை நிற கால்சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கப் ஆப் லைப்னு கப்ஸா வுட ஆசதான் இருந்தாலும் கேட்டிட்டிருக்குறது "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு"

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

யார் மாத்துறாங்களோ அவங்க விருப்பத்துக்கு மாத்திட்டு போகட்டும்

14.பிடித்த மணம்?

ஒன்னா ரெண்டா என்னத்த சொல்ல இந்த பதிவு போதாது இருந்தாலும் ஒன்னு ரெண்டு சொல்லிக்கிறேன், சாரல் நனைத்த மண்வாசனை, அம்மாவின் சமையல் மணம், மல்லிகைப்பூ மணம், காட்டுத்தேன் மகரந்த தூளோடு கூடிய மணம், ஒவ்வொரு பூவின் மணமும், வெங்காயம் தாளிக்கும் மணம், சுண்டிப்போன பாலின் மணம், நெய் மணம், எலுமிச்சை இலை முறித்து அதில் வரும் மணம், நறுமணம்.... இன்னும்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
நமக்கு தெரிஞ்ச பயபுள்ளைக எல்லாருமே பதில சொல்லிப்புட்டானுவ, என் சுற்ற என்னோட முடிச்சுக்குறேன்.
யாருமே இல்லாத டீக்கடையில யாருக்கு டீ ஆத்த சொல்லுதிய :)என்ன கேள்வி கேக்க ஆளே இல்லியான்னு யாராச்சும் லேசான சோகத்துல இருந்தீங்கன்னா இந்த கேள்விக்கான பதில அவங்களுக்கு அற்பணிக்கிறேன்.... ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணகட்டுதே

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

பதிவுகள் அவ்வளவா படிக்கிறதில்லன்னாலும் குழுமங்களில் கோகுலனின் கவிதைகளை அதிகம் படித்திருக்கிறேன் முக்கியமாக அம்மாவைப்பற்றி, காதல் கவிதைகள்னு சன்னமா தெறிக்கவிட்வாரு மனுசன் :).

17. பிடித்த விளையாட்டு?

கில்லி, உள்ளங்கையில்(மட்டும்) பம்பரம் விடுவது, கோலி, ஆற்றில் குளிக்கும் போது தொட்டு பிடிச்சு விளையாடுவது இப்படி விளையாட பிடிக்கும் பார்ப்பதற்கு மட்டைப்பந்து, கால்ப்பந்து !

18.கண்ணாடி அணிபவரா?

சத்தியமா இல்ல

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அதிகமா விரும்பி பார்க்கிறதில்லை, (எப்படிப்பட்ட படம் பிடிக்காதுன்னு கேட்டிருக்கலாம் :)

20.கடைசியாகப் பார்த்த படம்?

திரையரங்கில் போயி முழுசா பார்த்த படம் "யாவரும் நலம்" அனுபவிச்சு பார்த்தேன் நல்லாதான் இருந்தது வழக்கமான ஓட்டைகளுக்கு பஞ்சம் இல்ல !

21.பிடித்த பருவ காலம் எது?

சிறு பருவமா இருந்த காலம் தான், மத்தபடி சாரலடிக்கும் எந்த காலமும் !

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் !

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு காலத்துல 15 நிமிடத்திற்கு அதுவா மாறுகின்றமாதிரி உள்ள மென் பொருளை நிருவியிருந்தேன், இப்போதைக்கு மாற்றி வருசக்கணக்காவுது

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?


பிடித்த சத்தம் குழந்தையின் சிரிப்பு சப்தம், அழகான சிரிப்பு (குமரிமுத்து மாதிரி இல்ல ), காட்டு வண்டுகளின் ரீங்காரம், ஹோவென விழும் அருவியின் சப்தம், சலசலக்கும் ஓடை நீர் சப்தம், தொழுகை அழைப்பு ஓசை, (ஞாபகம் வச்சுக்கோங்க இசையை இதுல சேர்க்கல).

பிடிக்காதது : அழுகிறேன்னு ஓவென ஒப்பாரி வைக்கிறது, கோபத்தில் கத்துறது, காதைக்கிளிக்கும் ஒலிப்பான், வாகன இரைச்சல்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?


சின்ன புள்ளையில விசாகப்பட்டிணம் வரை, சமீபமா கர்நாடகா ஹூப்லி (தார்வாட்) வரை ரெண்டுல எது தூரம்னு தெரியாது :(

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எதுலயும் நோண்டி நொங்கெடுக்க நினைப்பது, தெரியலன்னு சொல்லத்தெரியாதது :) உபயம் கூகுள் :))

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல :)

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நானே ஒரு குட்டிச்சாத்தான்னு நாலுபேரு சொல்லுவானுவ இதுல எனக்குள்ளயே ஒரு சாத்தானா ? அது ஒரு ஓரமா தூங்கிட்டு இருக்கட்டும் இப்போதைக்கு இந்த குட்டிச்சாத்தானே போதும் :) அதெல்லாம் இருக்கட்டும் கேட்ட கேள்விக்கு பதில எங்கடேன்னு கேட்டியனா அது சோம்பலாத்தான் இருக்கும் :(

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எங்க ஊர்(கடனாநதி அணைக்கட்டும் அதைச்சார்ந்த காட்டுப்பகுதிகளும்), (சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போலாகுமா ??) ம் அப்புறமா சமீபமா சென்று வந்த கொடைக்கானல்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படித்தான் இருக்கக்கூடாதுன்னு ! (கட்டற்ற சுதந்திரமா!! ) கோட்டிக்காரப்பயலுவ எங்க இருக்கவுடுதானுவ :(

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

இப்பவரைக்கும் செய்ற எல்லாமே :)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
செத்துபோனவன்கிட்ட கேட்டாலும் அதத்தான் தேடிட்டிருக்கேன்பான் :), எனக்கு இன்னும் அனுபவம் பத்தாது இதுக்கு பதில் சொல்ல :)

அனுபவிங்கப்பூ ஆராயாதீக !

ஒரு வழியா முடிச்சிட்டேன் :)
வர்ட்டே

பேரன்புடன்

பாசக்கார பய

Sunday, April 12, 2009

Saturday, January 24, 2009

டிங் டிங்.. டிங் டிங்.. SMS

காலையில எந்திரிச்சவுடனே சூரியன் கதவ தட்டுது மலர்கள் காத்திருக்குன்னு ஒரு காலை வணக்கம்.

அப்புறமா இந்தநாள் இனியநாள் தினம் ஒரு தெருக்குரல்ன்னு ஒரு மொக்க வசனம்..

சாப்டாச்சா என்ன சாப்பாடுன்னு ஒரு மதிய வணக்கம். ஆணிபுடுங்குற இடத்துல தூங்கி எந்திருச்சி ஒரு மாலை வணக்கம்.

தூங்கலாம்னு போனா கண்ணகட்டுது, நிலவு தாலாட்டுதுன்னு இரவு வணக்கம்.

இதுக்கு இடையிடையே இவிங்க பன்ற அட்டூளியத்த சர்தார்மேல பழிய போட்டு அவர வம்புக்கு இழுக்குறது. இவங்க் போதைக்கு ஊறுகாயா விஜய்யையும் காந்தையும் தொட்டுக்குறது.

அப்புறம் இத பத்துபேருக்கு அனுப்பு இல்லாட்டி சாமி கண்ணகுத்திரும், தண்ணிலாரிமோதி சாவ அப்படின்னு மிரட்டல் வேற..

ஓசில குறுந்தகவல் இருக்குறவரைக்கும் இவிங்கலெயெல்லாம் திருத்தமுடியாது திருத்தவேமுடியாதுடியோவ் :) (அதான இவிங்க என்ன தேர்வுத்தாளா திருத்துறதுக்குன்னு கேட்காதீங்க)

ஆனாலும் அவசர உதவிக்கு இரத்த தேவைக்கு, விளிப்புணர்வுக்கு, ஆன்மீக செய்திக்குன்னு போர் அடிக்கும்போதெல்லாம் மாறிக்குறாங்க இவங்க உண்மையிலயே ரொம்ப நல்லவங்கப்பா

(அமெரிக்காவுல ஒரு சின்ன பொண்ணு ஒரே மாசத்துல 52000 குறுந்தகவல் அனுப்பியிருக்காமாம். சராசரியா ஒரு நாளைக்கு 1733 (கண்ணகட்டுதுடா சாமி).

ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்படியாவது ஒரு பதிவு போடமுடிஞ்சுதே ஹப்பாடா :)

பேரன்புடன்
மீறான் அன்வர்

Wednesday, August 13, 2008

கெழட்டு சிங்கம் ரிஷானுக்கு வாழ்த்து சொல்லி....

நம்ம தம்பியாப்புள்ள ரிஷான் வலைப்பூ பூத்து ஒரு வருசத்த முன்னிட்டு அத சாக்கா வச்சி இந்த பதிவு (எப்படியெல்லாம் பதிவு பதிய வேண்டியிருக்கு ஹ்ம் :)

கலக்கிட்ட போ, இந்த ஒரு வருசத்துல நம்ம மக்கள என்ன பாடு படுத்தி இருப்ப எல்லாரோட பின் ஊட்டத்த பார்த்தாலே தெரியுதுடே.

வெருமென வந்து வாழ்த்துக்கள்டா மச்சானு சொல்லிட்டுபோக மனமில்லடா. அதுக்குமேல ஏன்ன்மெல்லாமோ சொல்ல தோனுது. அதென்னென்னு தெரியலடா உன்ன வாழ்த்தனும்னா மட்டும் ஒரு வார்த்தையும் வந்து தொலைய மாட்டேங்குது.

நல்லா இருடே !

பேரன்புடன்
பாசக்கார பய

Thursday, June 5, 2008

மெல்லத் திறந்தது (காதல்) கனவு !!!

#
நீ பிரிந்த நொடிகளில்
ஒட்டிக்கொள்கின்றன
உன் நினைவுகள் !
#
I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் !
#
இதயத்தில் நீ குடிவந்த பிறகு
நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
துடிப்பை. !
#
நீ நகம் கடிக்கையிலும்வெட்கத்தில்
முகம் சிவக்கையிலும்உன்னிடம்
புதிதாய் சிறைபடுகிறது மனது !
#
கொள்கையோடு வாழ்ந்த மனது உன்னிடம்
கொள்ளை போன பொழுதை தேடி
தூங்காமலே துறக்கின்றது இரவுகளை !
#
உறங்கி முடித்ததொரு
வெள்ளை இரவில்மெல்லச்சாய்கிறேன்
கள்ளிஉன் நினைவுகளுடன்.....!
பேரன்புடன்
மீறான் அன்வர்

Tuesday, March 4, 2008

பொறந்த நாளு

பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து பாசக்கார மக்களுக்கும், அடுத்த பிறந்த நாளுக்கு முன்னதாகவே வாழ்த்துச்சொல்லப்போகும்(அதாவது இந்த பிறந்த நாளுக்கு தாமதமா) அனைவருக்கும் என் நன்றிகள், மேலும் இதுவரை பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொண்டடிய அனைவருக்கும் நான் சொல்லாமல் விட்ட பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எனது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையின் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது மதுரை மாநகரமே ஜொலிக்கும் அளவுக்கு மின் விளக்குகளும் தோரணங்களும் கட்டப்பட்டன, டிட்ஜிடல்போர்டுகளால் மதுரையே ஸ்தம்பித்தது, அனைத்து மக்களுக்கும் இசையுடன் கூடிய விருந்து வழங்கப்பட்டது, 1008 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தப்பட்டது, ஊர்முழுவதும் காது கிளிய ஒ்லிப்பெருக்கியில் பாடல் ஒலிப்ரப்பப்பட்டது

இரவு நாயக்கர் மஹாலில் இசைப்புயலின் இசை விருந்து ஏற்ப்்பாடு செய்யப்பட்டுள்ளது. அ்தோடு சிறப்பு கவியரங்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

என்றெல்லாம் எழுத ஆசைதான் கொடுமைய என்ன செய்ய வழக்கத்த விட கொடுமையா இருந்துச்சு என் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு ஆணி, ஏற்கனவே நேத்து ராத்திரி மின்சாரம் (சம்சாரம் இல்லீங்கோ) இல்லாம கொசுத்தொல்லையால தூக்கம் கெட்டது, வழக்கமா அத சரிகட்ட அலுவலகம் வந்து ஒரு தூக்கம் போட்டுருவேன் பாவிப்பயலுக அதுலயும் ஒரு லோடு மண்ண அள்ளி தட்டிட்டானுக, சரி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு வழக்கம்போல நானும் விட்டுட்டேன், ஆனா எனக்கு பொறந்த நாளுன்னுகூட தெரியாம ஆணிபுடுங்க வச்சிட்டாங்கங்கிறத நெனச்சிகூட வருத்தப்படல கடைசியா வீட்டுக்கு போகும்போது எலேய் உனக்கு பொறந்த நாளாம்ல எனிவே விஷ் யூ காப்பி பெர்த்த்டேன்னுட்டு போனாங்க பாருங்க என் மனசே எரிமலையா பொங்கிடுச்சு அப்புறம் நம்ம பாசக்கார மக்களின் நேத்துல இருந்து வந்த மடல்களை பார்க்க பார்க்க எம்மனசு பனிமலையா குளுந்துருச்சி

(நல்லவேல பாசக்கார பயலுக ட்ரீட் எதுவும் கேக்கல ஏன்னா யாருக்கும் தெரியாதுல்ல :))

அப்படி யாருக்கும் ட்ரீட் வேனும்னு கப்பலோ விமானமோ புடிச்சு கப்பலூருக்கு வந்தியன்னா சேட்டன் கடையில ஒரு கடுங்காப்பியும் அரிசிமுறுக்கும் வாங்கித்தரப்படும்.

பாசக்கார பய

Thursday, February 7, 2008

திருமங்கலம் 2 தென்காசி

ஒரு வழியா நணபனை நச்சரிச்சி அவன் கேமரா செட்டை வாங்கியாச்சு நடுச்சாமத்துல கெளம்பனும் ஊருக்கு. வழக்கமா ஊருக்கு போகும்போது ரெண்டுமணிவரைக்கும் வரிசையா கேபிள் டீவில படம் பாத்துட்டு அப்படியே கெளம்புவேன். இந்தவாட்டி எந்த வெளிநாட்டுப்்பய செஞ்ச சதியோ தெரியல நாரப்பய கேபிள் கனக்சனை கட்பன்னிட்டானுக சரி இருக்கவே இருக்குன்னு செல்லுல 1:30 மணிக்கு அலாரத்தை வச்சிட்டு கொறட்டை விட ஆரம்பிச்சாச்சு, அதுவும் கடமையா 1:30 மணிக்கு அலருச்சு ஆனா வழக்கமா காலையில 5:00 மணிக்கு அலாரம் வச்சி எந்திச்சிட்டு அந்த காலை குளிருக்கு போத்திக்கிட்டு திருப்பி ஒரு குட்டித்தூக்கம் போடுவேன் அந்த நெனப்புல 1:30க்கு எந்திச்சி திருப்பியும் கொஞ்சம் பெரிய குட்டித்தூக்கமா போட்டுட்டன். காலைல நம்ம பாசக்கார பயலோட கடலச்சத்தம் கேட்டு எந்திச்சுபார்த்தா மணி 5:00 பதரி அடிச்சு பல்கூட வெளக்காம் கெளம்பியாச்சு வழக்கமா கப்பலூர் பாலத்துல போயிதான் பஸ் ஏறுவேன் அன்னிக்குன்னு மகராச்ன் பாலத்துக்கு கீழேயே வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க. திருமங்கலத்துல இறங்கி ஒரு 10 நிமிசம் தென்காசி போய் போகலாமா இல்ல நெல்லை போய் போகலாமான்னு பலமா யோசிச்சிக்கிட்டு இருக்கும்போதே செங்கோட்டை வண்டி வர ஓடிப்போய் மொத ஆளா ஏறி இடம்பிடிச்சாச்சி அப்புறம் என்னா அங்க தூங்குனது ராசபாளையம் வந்துதான் எழுப்பிவிட்டாங்க அப்புறம்தான் தலைக்குமேல ஒரு பல்பு எரிஞ்சது பையில கேமிரா செட்டு எதுக்கு அநாவசியமா தூங்கிட்டு இருக்குன்னு சும்மா வளைச்சு வளைச்சு எடுக்கலாம்னு போனா நம்ம சீட்டு ஜன்னலோர சீட்டுக்கு அடுத்தசீட்டு ஜன்னலோர சீட்டுல ஒரு சேட்டன் புல்லா ஏத்திக்கிட்டு மல்லாக மலந்து கெடக்காரு சகுனமே சரியில்லையேன்னு பொறுத்துக்கிட்டேன்.

இராசபாளையத்துல ஒரு பெரிய கூட்டமே இறங்க ஒரு வழியா ஒரு வசதியான ஜன்னலோர சீட்டுல இடம் போட்டுட்டு ஒரு டீ சாப்பிடலாம்னு போயிட்டு பல்லு தேய்க்காம டீ சாப்பிடக்கூடாதுன்னு ரென்டு அப்பம் மட்டும் சப்பிட்டுட்டு சீட்டுக்கு வந்தா அங்க் முன்னாடி சீட்டுல உள்ள ஒரு பய முழு கண்ணாடியையும் என் பக்கமா தள்ளிவிட்டுட்டு வேடிக்கை பார்த்திக்கிட்டு இருந்தான் எலேய் கண்ணாடிய அங்கிட்டு நவுட்றா அண்ணே போட்டோ எடுக்கப்போரோம்லன்னு சீன் போடலாம்னுதான் பார்த்தேன் பய கொஞ்சம் வாட்ட் சாட்டமா இருந்தான் மெதுவா காது பக்கத்துல போயி எண்ணே கண்ணாடிய அங்கிட்டு கொஞ்சம் நவுட்டுங்களேன் அப்படின்னேன் ஒரு பார்வை மேலயும் கீழயும் பார்த்துப்புட்டு கொஞ்சமா நவுட்டுனாரு.

அப்பாடான்னுட்டு செட்ட வெளிய எடுத்து படம் காமிக்க ஆரம்பிச்சேன் இல்ல இல்ல படம் பிடிக்க ஆரம்பிச்சேன்.ஓரளவுக்கு வெளிச்சமாத்தான் இருந்துச்சு ராசபாளையம் பஸ் ஸ்டாண்ட விட்டு கெளம்பும் போதுதான் அங்கிட்டு ஷூட்டிங்க் நடக்குற விசயமே தெரிஞ்சுச்சு படம் பிடிக்கிறத படம் பிடிச்சிர்லாம்னு பார்த்தா செட்டுல சிக்கினது கேமிரா முன்னாடி நின்ன கூட்டம் தான் அது இந்த படம்ந்தேன். பசுபதிதான் ஹீரோவாம்.
சரியா பஸ் ஸ்டாண்டுக்கு வெளிய


சரின்னு அப்படியே வாய் பார்த்துக்கிட்டே வந்தேன் ஒரு கோயிலு கண்ணுல பட்டுச்சு பாட்டுனு சுட்டுட்டேன்சரி கோயில பட பிடிச்சாச்சி அப்படியே ஒரு குளத்தையும் ப்டம் பிடிச்சுட்டமுனா புண்ணியமா போகுமுன்னு கொளத்த தேடிக்கிட்டே வந்ததுல ஒரு கொளம் கெடச்சுது ஆனா அதுல தண்ணி எங்க இருந்துச்சுன்னு தெரியல.
பச்சப்பசேல்ன்னு வயல்வெளி இருக்கும் ஜம்முனு புடிக்கலாமுனு பார்த்தா அங்கிட்டு எல்லாம் கதிர சொமக்க முடியாம அப்படியே என்னோட போட்டோவுக்கு போஸ் குடுக்கமுடியாமையும் தைல் கு்னிஞ்சு நின்னத பார்க்க பரிதாபமாக இருந்தாலும் எதிர்த்த சீட்டுல இருந்த ஒரு சுடியின் ஒரப்பார்வையை ஓரமாக வாங்கிக்கிட்டு இருக்கும்போதே தன்னால பட்டன அழுத்திப்புட்டேன்
அடுத்ததா தேவ தானத்துல ஒரு குட்டித்தேர் எத்தனையோ எடுக்க என்னையும் எடேன்னு வர்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அதையும் அதற்கு முன்பு போஸ் குடுத்தவரையும் சேர்த்து ஷூட் பன்னினது.
பச்சை நிறமே பச்சை நிறமே அப்படின்னு பாடத்தோனுச்சு புடிச்சிட்டேன்ஒரு பெரிய அழகான வாகை மரம் கொஞ்சம் நெற்பயி ரெண்டு தென்னை மரம் எல்லாத்்தையும் சேர்த்து வச்சு ஒரு பெரும்பாறையின் அடியில் கண்ட காட்சி
நாக்கெல்லாம் இனிக்கிறமாதிரி இருந்துச்சு என்னடான்னு பாத்தா அதான் தரனி சர்க்கரை தொழிற்சாலையாம் சரின்னு அதையும் சுட்டு வச்சுக்கிட்டேன்


வெறும் முகப்பு மட்டும் போதாதுன்னு ஆலையையும் சேத்து புடிச்சாச்சு

நல்ல வேளை எந்த பசுவுமே நான் போட்டா எடுத்தத பாக்கல
கடையநல்லூரின் பிரதான சாலையிலிருந்து ஒரு கிளிக்கடையநல்லூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே வயலுடன் கூடிய சாலை


அன்னிக்கு வேர ஞாயிற்றுக்கிளமையா அதான் ஒரு பேருந்தையும் காணோம் (வெடிகுண்டு புரளியெல்லாம் ஒன்னுமில்லேங்க) தென்காசி பேருந்து நிலையம்.நாய் குறுக்க வரும்போதே நெனச்சேன் இந்த போட்டா அழகா வரும்னு ஆனா இப்படி பேரழகா வரும்னு நெனைக்கல.யாருமே இல்லாத பஸ் ஸ்டாண்டுல கடமைக்காகவும் சில ப்ஸ் நிக்கத்தான் செய்யுது.
உள்ள வெங்கலச்சிலையில நிக்கிறது திரு அனந்தராமகிருஷ்ணன் அவர்கள் ஆழ்வார்குறிச்சில நான் படிச்ச பரமகல்யாணி பள்ளியை நிறுவியவர். கூடவே பரமகல்யாணி மருத்துவமனை, கல்லூரி, திருமண மண்டபமும் சேரும்.

ஒரு வழியா ஒரு மொக்கையை பக்காவா பதிஞ்சாச்சி

இப்படி பதிஞ்சிட்டு வெளிய எட்டிபார்த்தா ஒரு பேரிரைச்சல் இருட்டுல ஒன்னும் தெரியல் கொஞ்சம் வெளியே வந்து பார்த்த வானம் பொத்துக்கிட்டு ஊத்துதுங்கோ.என்னே கொடுமைசாமி இது. இதுகே இப்படின்னா அடுத்து வரும்போது ரயிலில் எடுத்த போட்டோவைப்போடும்போது என்ன நடக்குமோ .

பேரன்புடன்
மீறான் அன்வர்

Saturday, January 12, 2008

கடனா நதி - 2 (சில காட்சிகள்)

தோணியாற்றிலுள்ள அருவி, அனைக்கட்டின் புதுப்பிக்கப்பட்ட பகுதியிலிருந்து இந்த காட்சி.அந்தி சாய்ந்த ஒரு பொழுதில்
வேறு கோணத்தில்்...

Monday, December 10, 2007

தொலைந்த நிஜங்களை நிழலில் தேடுகிறேன்

தொலைத்த நிஜங்களை நிழலில் தேடுகிறேன்

இயற்கையின் பேரழகை
இமைக்காமல் ரசித்த நாட்களை

பார்வையில்கூட கேள்வியையுடன்
பார்க்கும் மழலைகளுடன் மகிழ்ந்த நாட்களை

மழையில் கைநனைத்து
மழலையான நாட்களை

சில்லென சிலிர்க்க வைக்கும்
மலைச்சாரலில் உடல்நனைத்த நாட்களை

பழய கஞ்சியுடன் உரித்த வெங்காயத்தை
மனது நிறைந்த நிம்மதியோடு
வயிறு நிறைத்த நாட்களை

அருவிக்குலியலில் ஆயுளைக்களிக்க......
நினைத்த நாட்களை

ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த உலகத்தை
ஜன்னல் உலகில் தேடுகிறேன்,

முகம் தெரியாத நட்புகள்,
உதடு தெரியாத புன்னகைகள்.
நிஜமான நிழலுலகம் இது.

நேரில் எதிர்நோக்கும்
எத்தனையோ கோடி
முகங்களை விட்டு விட்டு

பாரின் எங்கோ ஒரு மூலையில்
மறைந்திருக்கும் முகங்களை
சந்திக்கவே நிந்திக்கிறது மனது......

உள்ளங்கையில் உலகம் வந்தபோது
எதிர்வீட்டு சொந்தங்கள்கூட
அண்டைகிரகவாசிகளாகிவிட்டனர் எனக்கு

ஜன்னலோர பயணத்தில்
தொலைத்த அந்த நிஜ உலகத்தை
இந்த நிழலான ஜன்னல் உலகில் தேடுகிறேன்,

தேடல்களுடன்
மீறான் அன்வர்